தனிமையில் வசிக்கும் முதியவர்களுக்கு கொள்ளை, கொலை அபாயம் ; பொலிஸார் விசேட எச்சரிக்கை
ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கைப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய கொள்ளைச் சம்பவங்களின்போது முதியவர்கள் கொலை செய்யப்படும் அபாயமும் காணப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பிள்ளைகள் தொழில் நிமித்தம் தூர இடங்களுக்குச் சென்றுள்ள அல்லது வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள நிலையில், வீடுகளில் தனிமையில் வசிக்கும் முதியவர்கள் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு இலகுவாக இலக்காகும் அபாயம் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, போதைப்பொருட்களுக்கு அடிமையான சிலர் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைத் திருடும் நோக்கில் இத்தகைய வீடுகளைக் குறிவைக்கக்கூடும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைக்காலங்களில் பதிவான பல சம்பவங்களில் கொள்ளையின்போது கொலைகளும் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, தனிமையில் வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குடும்பத்தினரும் பொதுமக்களும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.