கைதான தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரான ரன்னுளு சந்திரசிறி டி சொய்சாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (24) பிணையில் விடுவித்தது.
அதற்கமைய தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் விதித்து நீதிவான் பிணை வழங்கி வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார். மேலும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிவான் இதன்போது பயணத்தடை விதித்து பிணையில் விடுவித்திருந்தார்.

பிணையில் விடுதலை
தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டில் 16.5 மில்லியன் ரூபா தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, தென் மாகாணத்தின் பொது தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறித்த திட்டத்தின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளிலிருந்து விலகி, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயற்பட்டமை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.