80 ஆயிரத்தை கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை ; ஆபத்தாகும் நிலைமை
நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோயாளர்கள் எண்ணிக்கை
இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் 42,414 (52.84 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 12,154 (15.17 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தொட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாத்திரம் 198 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.
காய்ச்சல் ஏற்படுமாயின் கட்டாயமாக அவர் ஓய்வெடுப்பது அவசியம். டெங்கு நோய் உறுதிப்படுத்தப்படும் வரை தகுதியுள்ள வைத்தியர் ஒருவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு அமைவாக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், அவர் அறிவுறுத்தும் பட்சத்தில் வைத்தியசாலை நாடி சிகிச்சை பெறுவதும் அவசியம்.
வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றாத போதே, நோய் நிலைமை தீவிரமடைவதோடு, அதனால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது. தகுந்த நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டால் டெங்கு காய்ச்சலால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.