இலங்கையில் சுத்தமான எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்த உறுதி!
அமெரிக்க அரசு, அதன் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகமான யுஎஸ்எய்ட் (USAID) ஊடாக, இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு சுத்தமான எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
இந்த கூட்டாண்மையின் கீழ், இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டிபிஎம்சி, முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றி விற்பனைக்குப் பிந்திய சேவைகளாக நாடளாவிய ரீதியில் உள்ள தமது சேவை மையங்கள் மூலம் வழங்கவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் போன்ற நிலையான எரிசக்தி திட்டங்கள் அனைத்து இலங்கையர்களுக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவுகின்றன என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த நிகழ்வின்போது கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் முச்சக்கர வண்டித் தொழிற்துறை 500,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
1961 ஆம் ஆண்டு முதல் USAID ஆனது இலங்கையில் பொருளாதார மேம்பாடு, தொழில்முனைவு, பெண்கள் வலுவூட்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களுக்கு 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இலங்கை ரூபாவில் 700 பில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.