பொலன்னறுவையில் சட்டவிரோத மின்சாரக் கம்பியால் யானைக்குட்டி உயிரிழப்பு
பொலன்னறுவை, வெலிகந்த - மெனிக்தெனிய பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 7 வயதுடைய காட்டு யானைக்குட்டி ஒன்று இன்று (05) காலை உயிரிழந்துள்ளது.
தோட்டம் ஒன்றைச் சுற்றிச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் உரசியதாலேயே இந்த யானைக்குட்டி மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யானைக்குட்டியின் உடற்கூறாய்வுப் பரிசோதனையை கிரித்தலே வனஜீவராசிகள் கால்நடைப் பிரிவு அதிகாரி காளிந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், சட்டவிரோதமாக மின்சாரக் கம்பியைப் பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரைப் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.