தமிழர் பகுதியில் வர்த்தக நிலைய ஆய்வின்போது மோதல் ; வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்
வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், அவர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரில் அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வர்த்தகர் சங்கத் தலைவர் கிருஸ்ணமூர்த்தி (சிவா) தலைமையில், சுகாதாரப் பிரிவினர் மற்றும் வவுனியா மாநகரசபையினர் இணைந்து நகரிலுள்ள வர்த்தக நிலையங்களைப் பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, வர்த்தக நிலையங்களைப் பார்வையிடும் நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வர்த்தகர் ஒருவரால் தம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தகர் சங்கத் தலைவர் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் சங்கத் தலைவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றைய நபரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் சம்பவத்திற்கான முழுமையான காரணங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.