வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; புயலாக வலுப்பெறுமா?
வங்கக்கடலில் எதிர்வரும் 13ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிதாக உருவாகவுள்ள இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று தாழமுக்கமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகின்றது.
அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வானிலை அவதானிப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஆரம்பமானதிலிருந்து வங்கக்கடலில் இதுவரை மூன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளன.
அவற்றில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் புயல்களாக வலுப்பெற்று ஆந்திரப் பிரதேசக் கரையோரப் பகுதிகளில் கரையைக் கடந்துள்ளன.
தற்போது எதிர்வரும் 13ஆம் திகதி உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இந்தப் பருவமழைக் காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் நான்காவது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அமையும்.
இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுக்குமா என்பது தொடர்பில் தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இதன் நகர்வு, தீவிரம் மற்றும் வலுப்பெறும் தன்மை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.