மட்டக்களப்பில் நீதிமன்றுக்கு அருகே தனக்கு தானே தீ வைத்த முதியவர்
மட்டக்களப்பு திறந்த நீதிமன்றில் தனக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவித்திருந்த 66 வயதுடைய முதியவர் ஒருவர், நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகிலுள்ள வீதியில் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் மட்டுநகர் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி குணசேகரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள காணி தொடர்பாக உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பொலிஸார் அவரையும் மேலும் ஐவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (12) திறந்த நீதிமன்றில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தீர்ப்புக்கான திகதியை நீதவான் அறிவித்தபோது, குறித்த முதியவர் நீதிமன்றில் கையை உயர்த்தி, தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகச் சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்றப் பொலிஸார் அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில், மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீதியில் அவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீயில் எரிந்த அவரைக் கண்டவர்கள் உடனடியாகப் பொலிஸாருக்கும் 1990 அவசர மருத்துவ சேவைக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
விரைந்து செயற்பட்டவர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, படுகாயமடைந்த அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முற்பகல் 11 மணியளவில் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 104 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நவம்பர் மாதத்தில் மாத்திரம் ஐவர் தீ வைத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.