முகநூல் களியாட்ட விருந்திற்கு போதைப்பொருள்; இளைஞர் கைது
முகநூல் களியாட்ட விருந்து ஒன்றுக்கு கொண்டுவரப்படவிருந்த 95 கிராம் ஹேஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஹாகொடை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணை
சந்தேகநபர் 26 வயதுடையவர் என்பதுடன் அப்பகுதியில் வாடகை வீடொன்றை பெற்று வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் சனிக்கிழமை (16) பேராதனை பிரதேச விடுதியொன்றில் மேற்படி களியாட்ட விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகவும் அதில் வழங்குவதற்கே இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிவந்துள்ளது.
இதேவேளை குறித்த போதைப்பொருள் கடவத்தைப்பிரதேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.