விண்வெளியில் அதிரடி மாற்றம் ; சூரிய CME பூமியை தாக்க வாய்ப்பு
சூரியனில் இருந்து வெளிப்பட்ட பிரம்மாண்டமான M5.7 ரக சூரியச் சுவாலை (Solar Flare) மற்றும் அதனுடன் இணைந்த கொரோனல் மாஸ் இஜெக்ஷன் (CME) காரணமாக, இன்று இரவு வட துருவப் பகுதிகளில் 'வடக்கு ஒளி' எனப்படும் அரோரா (Northern Lights) தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கடந்த 10 ஆம் திகதி காலை 9:39 மணியளவில் (EDT), சூரியனின் AR4436 என்ற சூரியப்புள்ளிப் பகுதியிலிருந்து இந்த சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த வெடிப்பின் போது வெளியான தீவிர எக்ஸ்ரே மற்றும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் குறுகிய கால ரேடியோ சிக்னல் பாதிப்புகள் (Radio Blackout) ஏற்பட்டன.

இது விமானிகள் மற்றும் மாலுமிகளின் தகவல் தொடர்பை தற்காலிகமாக பாதித்தது. சூரியனிலிருந்து வெளியேறிய இந்த பிளாஸ்மா மற்றும் காந்தப்புல துகள்கள் (CME), நாளை (மே 13) அதிகாலை பூமியை உரசிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால் பூமியின் காந்தப்புலத்தில் சிறிய அளவிலான (G1) புவிக்காந்த புயல் உருவாகலாம். இதனால் அமெரிக்காவின் வடக்கு மாநிலங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் அழகான வடக்கு ஒளியைக் காணும் வாய்ப்பு உள்ளது.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2024 மே 10 அன்று பூமியை ஒரு அதீத (G5) புவிக்காந்த புயல் தாக்கியது.
அது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நிகழ்வாகும். தற்போது நிகழ்ந்துள்ள வெடிப்பு அந்த அளவிற்கு சக்திவாய்ந்ததாக இல்லாவிட்டாலும், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
சூரியனின் சுழற்சி காரணமாக, தற்போது வெடிப்பு நிகழ்ந்த பகுதிகள் பூமியின் நேரடிப் பார்வைக்கு (Strike Zone) வந்துள்ளன.
எனவே, வரும் நாட்களில் இன்னும் சக்திவாய்ந்த X-class ரக வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (NOAA) எச்சரித்துள்ளது.