6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
இந்தியாவின் ஹரியானா மாநிலம் சோனிபட்டில், அத்தை கையில் இருந்த 6 மாத குழந்தையை பிட்புல் நாய் திடீரெனத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. சோனிபட்டின் சிக்கா காலனியில், குழந்தையின் அத்தை அவரைத் தூக்கிக்கொண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பாய்ந்து வந்த பிட்புல் நாய் இருவரையும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாய் பாய்ந்ததில் நிலைதடுமாறிய பெண் கீழே விழுந்ததுடன், அவரது கையில் இருந்த குழந்தையும் சாலையில் விழுந்துள்ளது.

அப்போது குழந்தையை நாய் கவ்வியதாகவும், குழந்தையை மீட்பதற்காக அப்பெண்ணும் அங்கிருந்த சிலரும் முயற்சித்த போதிலும், நாய் குழந்தையை விடாமல் கடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நாய் தாக்குதலில் பலத்த காயமடைந்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, ரோத்தக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பிட்புல் போன்ற நாய் எவ்வாறு கட்டுப்பாடின்றி சுற்றித்திரிய முடிந்தது என்றும், நாயின் உரிமையாளர் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதுவரை குழந்தையின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு எதுவும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.