இனி வீட்டுக்கே வரும்சுகாதார சேவைகள் ; ஜனாதிபதி அறிவித்த புதிய சுகாதாரத் திட்டம்
பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த மற்றும் இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக பல பிரதான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, பொதுமக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரச் சேவை மேலும் நெருக்கமாக்கப்படுவதுடன், உலகளவில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் முறைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான நிதி எதிர்வரும் ஆண்டில் ஒதுக்கப்படவுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, அடுத்த ஆண்டுக்குள் 16 இடங்களில் 'கெத் லெப்' (Cath Lab) வசதிகள் ஆரம்பிக்கப்படும்.
மேலும், இதய நோய் சத்திர சிகிச்சைகளுக்காக காணப்பட்ட 1 முதல் 2 வருட காலக் காத்திருப்புப் பட்டியல், குறுகிய காலத்திற்குள் 15 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுகாதாரத்துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.