இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகளை இறுதி செய்வதை விரைவுபடுத்துவது குறித்து இலங்கையும் சவூதி அரேபியாவும் கலந்துரையாடியுள்ளன.
அதன்படி, சவூதி அரேபியாவுக்கான ஸ்ரீலங்கை தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வாத் (O.L. Ameer Ajwad), ரியாத் நகரில் அமைந்துள்ள நீதி அமைச்சில், சவுதி அரேபியாவின் சட்ட மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலவியை (Mishaal bin Ali Al-Balawi) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீதி மற்றும் சட்டத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக இரண்டு உத்தேச உடன்படிக்கைகளையும் துரிதமாக இறுதி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகச் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீள உறுதிப்படுத்தியதுடன், இருதரப்பு நலன்சார்ந்த பிற விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் தூதரகத் தலைவருமான தமித்ரி சமங்கிக்க (Damithri Samangika) மற்றும் தூதரக அதிகாரி சஜீத் (Sajeeth) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.