யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையின் இலத்திரனியல் கழிவுகள் , பிளாஸ்ரிக் கழிவுகள் , மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , அது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் உள்ளூராட்சி ஆணையாளர் ச, சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என பணித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் , கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள் , இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது


