யுவதியிடம் அத்துமீறிய மருத்துவர் ; பெற்றோருக்கு பணம் கொடுத்து மறைக்க முயற்சி!
தனக்குக் கீழ் பணியாற்றும் யுவதியொருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர் ஒருவர், பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பம் தன்னிடம் கப்பம் கோருவதாக போலி முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காலி, கராப்பிட்டிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், உணவடுன பிரதேசத்தில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
யுவதியின் பெற்றோருக்கு பணம்
அங்கு வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குவற்கான வாடகை அறைகளும் உள்ளன. இந்நிலையில், குறித்த மருத்துவர் தனது மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் யுவதியொருவரை தவறான முறைக்குட்படுத்த முயன்றுள்ளார்.
எனினும், யுவதி அங்கிருந்து தப்பி வந்து தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
யுவதியின் பெற்றோர் மருத்துவரிடம் அது தொடர்பில் வினவியபோது , தனக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக முப்பத்தி ஐந்து இலட்சம் தந்து பிரச்சினையை சமாதானமாக முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதியின் தரப்பும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், மருத்துவர் சார்பில் முதற்கட்டமாக வழங்கப்படுவதாக வாக்களித்த ஐந்து இலட்சம் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட யுவதியின் பெற்றோர் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் தன்னிடம் கப்பம் கோருவதாக தெரிவித்து பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார். யுவதியின் பெற்றோர் தற்போது ஹபராதுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.