ஆட்சியை தக்கவைக்க ஈழத்தமிழர் மீது கரிசனை காட்டும் திமுக! 89,000 பேருக்கு குடியுரிமை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு "மனிதாபிமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான" தீர்வை வழங்குமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் தனது கடிதத்தில், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதி முகாம்களிலும் அதற்கு வெளியேயும் வசித்து வருகின்றனர்.

89,000 பேருக்கு குடியுரிமை கேட்டு கடிதம்
இவர்களில் சுமார் 40 சதவீதமானோர் இந்தியாவில் பிறந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 பேருக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்காளர் உரிமையைப் பெற்றுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தடுக்கும் முந்தைய நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்தல். குடியுரிமை விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்த மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல்.
2015 ஜனவரி 9 ஆம் திகதி வரை தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களை "சட்டவிரோத குடியேறிகளாக" கருதக்கூடாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தல் போன்ற பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, திமுக அகதிகள் விவகாரத்தை ஒருபோதும் எழுப்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ் மொழி, அடையாளம் மற்றும் ஈழத் தமிழர் நலன் ஆகியவற்றை முன்வைத்து திமுக தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த கடிதம் மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக மீது அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு நகர்வாகப் பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.