இலங்கையின் அபிவிருத்திக்கு ஐ.நா.வின் ஒத்துழைப்பு ; 2028–2032 திட்டம் குறித்து பிரதமர் ஹரிணியுடன் பேச்சு
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche உள்ளிட்ட தூதுக்குழுவினர் நவம்பர் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, 2028–2032 காலப்பகுதிக்காக இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ள 'ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்' தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இதன்போது, முன்மொழியப்பட்ட ஒத்துழைப்புச் சட்டகத்தைத் தயாரிப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கூட்டு வேலைத்திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.
அமைச்சுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், புத்திஜீவிகள் சமூகம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்துரையாடி, ஒத்துழைப்புச் சட்டகத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பிரதான துறைகளையும் இலக்குகளையும் அடையாளம் காணும் செயன்முறையின்போது பிரதமருடன் கலந்துரையாடக் கிடைத்தமை ஒரு விசேட சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தற்போது முகங்கொடுத்துவரும் பிரதான அபிவிருத்திச் சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்துப் பிரதமருக்கும் தூதுக்குழுவினருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அபிவிருத்தி ஒத்துழைப்புக்காகப் பரந்த, இலக்கு வைக்கப்பட்ட அணுகுமுறையொன்றைப் பின்பற்ற வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்கள் இலங்கையின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதையும், அவ்வேலைத்திட்டங்கள் ஊடாக நாட்டின் அபிவிருத்தித் தேவைகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலக்கு வைக்கப்பட்ட, பயனுள்ள ஒத்துழைப்பு வேலைத்திட்டங்கள் ஊடாக இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புத் துறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அபிவிருத்தித் திட்டங்களை அடிமட்டத்திலிருந்து பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும்போது தாக்கம் செலுத்தும் பிரதான சவால்களாக, நீண்ட காலம் எடுக்கும் கொள்முதல் நடைமுறைகளையும், தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளப் பற்றாக்குறையையும் அடையாளம் காண முடியும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பயனுள்ள வகையில் திட்டமிடுதல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக உரிய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிறுவனக் கொள்ளளவை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உரிய பதவிகளுக்குத் தகுந்த திறன்களும் நிபுணத்துவமும் கொண்டவர்களை நியமிப்பதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அபிவிருத்தித் திட்டமிடல் மற்றும் தீர்மானம் எடுக்கும் செயன்முறைகளில் சிவில் சமூக அமைப்புகளையும் ஏனைய உரிய பங்குதாரர்களையும் இணைத்துக்கொள்வதன் அவசியம் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.
அதன் மூலம் அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பை உள்ளடக்கிய, சகலரையும் உள்வாங்கும், தேவைகளுக்குப் பதிலளிக்கும் அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைய முடியும் எனவும் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஐக்கிய நாடுகள் தூதுக்குழுவில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் Joni Simpson, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி கலாநிதி ராஜேஷ் பாண்டவ, சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் இலங்கைக்கான பிரதானி கிறிஸ்டின் பார்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோட்டா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.