ஆசிரியர்கள், அதிபர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு ; நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டம்
2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.
2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வித் துறை ஊழியர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட போதிலும், இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, நவம்பர் மாதம் 30 ஆம் திகதி சுகவீன விடுமுறை அறிக்கை சமர்ப்பித்து ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் சுமார் 250,000 ஆசிரியர்கள் மற்றும் 10,110 பாடசாலைகளின் ஆசிரியர்கள் - அதிபர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் துரிதத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், “2027 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வித் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது கடும் எதிர்ப்பு உள்ளது.
இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளோம். எதிர்வரும் முதலாம் திகதிதான் விசேடமாகக் கல்வி விவாதம் நடைபெறவுள்ளது.
எனவே, இந்தக் கல்வி விவாதத்திலாவது இது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பிரிவெனா ஆசிரியர்கள் என அனைவரின் பிரச்சினைகள் தொடர்பிலும் எவ்வித வேலைத்திட்டமும் இல்லை.
இந்த நிலையில், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி என்ற ரீதியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் நடவடிக்கைக்குச் செல்லத் தீர்மானித்துள்ளோம்.
இந்த நாட்டில் உள்ள சுமார் 250,000 ஆசிரியர்கள், அதேபோல் 10,110 பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் இதில் இணைவார்கள் என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும்.
அதனால், கல்வித் துறை தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர எமக்கு வேறு மாற்று வழியில்லை.” என்றார்.