கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
கொழும்பு பொரளை, டி.எஸ். சேனாநாயக்க சந்தியை அண்மித்த வீதிப் பகுதியொன்றை இன்று (20) இரவு 10.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு கொழும்பு போக்குவரத்துப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வீதித் தடத்தில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வழிந்தோடும் நிலையைச் சீர்செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை அந்த வீதிப் பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைக்கும் நோக்கில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, வெலிக்கடை பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆயுர்வேத சந்தியிலிருந்து கோட்டா வீதிக்குப் பிரவேசித்து பொரளை நோக்கிப் பயணிக்க முடியும்.
மேலும், மொடல் பாம் (Model Farm) சந்தியிலிருந்து பழைய புல்லர்ஸ் வீதி (Old Bullers Road) ஊடாக மயான சுற்றுவட்டத்தை நோக்கிப் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, குறித்த வீதிப் பகுதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பின்பற்றி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.