99 கிலோவுக்கும் அதிக போதைப்பொருளை தீயிட்டு அழிக்க நடவடிக்கை!
வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நாளை சனிக்கிழமை (25) தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.
புத்தளம், வனாத்தவில்லு - லாக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள சிறப்பு எரியூட்டியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாரவில நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தவாறு நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களால் அழிக்க உத்தரவிடப்பட்ட வழக்கு, முடிவடைந்த ஏனைய போதைப்பொருட்களுமே தீயிட்டு அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை காலை வேளையில் குறித்த போதைப்பொருட்கள் அனைத்தும் மாரவில நீதிமன்ற வளாகத்திலிருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, வனாத்தவில்லு எரியூட்டியில் வைத்து அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.