தந்தைக்கும் தாயுள்ளம்; ஸ்பெயின் கால்பந்து வீரர் குகுரெல்லாவின் சுருள் முடிக்குப் பின் இப்படி ஒரு கதையா!
ஸ்பெயின் நாட்டின் முன்னணி தற்காப்பு ஆட்டக்காரரான (Defender) மார்க் குகுரெல்லாவின் (Marc Cucurella) நீண்ட சுருள் முடி, கால்பந்து உலகிலும் இணையத்திலும் அவரது மிக முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இணையத்தில் ஒரு நெகிழ்ச்சியான தகவல் பரவியது. ஆட்டிசம் (Autism) குறைபாடு உடைய அவரது மூத்த மகன் மாதியோ (Mateo), மைதானத்தில் விளையாடும் 22 வீரர்களில் தனது தந்தையை உடனே அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே அவர் முடியை வெட்டாமல் வைத்துள்ளார் என்ற செய்தி உலகளவில் வைரலானது.

தந்தையை உடனே அடையாளம் காண வேண்டும்
செல்சி மற்றும் ஸ்பெயின் கால்பந்து அணியின் பாதுகாப்பு வீரரான மார்க் குகுரெல்லாவின் நீண்ட சுருள் முடி, அவரது தனித்துவமான தோற்றத்தின் ஓர் அங்கமாக மட்டுமல்லாமல், மகன் மீதான அன்பின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.
குகுரெல்லாவின் மூத்த மகன் மாதியோ ஆட்டிசம் நிலையுடன் வாழ்ந்து வருகிறார். போட்டியின்போது மைதானத்தில் இருக்கும் பல வீரர்களுக்கு மத்தியில் தனது தந்தையை அவர் எளிதாக அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே குகுரெல்லா தலைமுடியை நீளமாகவும் சுருளாகவும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் 22 வீரர்கள் விளையாடும் கால்பந்து மைதானத்தில், குகுரெல்லாவின் தனித்துவமான தலைமுடி அவரை மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதனால் மாதியோ தனது தந்தை எங்கு விளையாடுகிறார் என்பதை உடனடியாகக் கண்டறிய முடிகிறது.
வெளிப்பார்வைக்கு இது ஒரு சாதாரண தோற்றத் தேர்வாகத் தோன்றினாலும், குகுரெல்லாவின் குடும்பத்திற்கு இதன் பின்னால் ஆழமான உணர்வும் அன்பும் நிறைந்துள்ளது.
கோல்கள், வெற்றிகள் மற்றும் கிண்ணங்களுக்கு அப்பாலும், குடும்பத்திற்காக வீரர்கள் மேற்கொள்ளும் சிறிய செயல்களே கால்பந்தின் மிக அழகான தருணங்களாக மாறுகின்றன என்பதற்கு குகுரெல்லாவின் இந்தச் செயல் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது