குருநாகலில் போலியாக நிர்மாணிக்கப்பட்ட தலதா மாளிகை இடிப்பு!
குருநாகல் - பொத்துஹெரவில் அமைக்கப்பட்ட போலி தலதா மாளிகை தற்போது இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பௌத்த மதக்குருக்களால் பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகை கட்டப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான ‘தலதா மாளிகை’ கட்டப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் சேபால் அமரசிங்க என்ற மற்றொருவரால் வெளியிடப்பட்ட கருத்து பௌத்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனையடுத்து ஜனக சேனாதிபதி மற்றும் சேபால அமரசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதன்படி, விசாரணைகளை முன்னெடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சேபால் அமரசிங்கவை கைது செய்து, நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 10 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் போலி தலதா மாளிகையும் இடிக்கப்பட்டது.