மெட்டா AI-க்குக் குரல் கொடுத்த முதல் இந்தியப் பிரபலம் தீபிகா படுகோன்
பொலிவுட் நடிகை தீபிகா படுகோன், மெட்டா (Meta) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பதிப்பிற்கான புதிய குரலாகப் பல்வேறு நாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீபிகா படுகோன் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டார்.
அதில், "ஹாய், நான் தீபிகா படுகோன். நான் மெட்டா AI-இன் புதிய குரல். ரிங்கைப் தட்டுங்கள், எனது குரல் வரும்" என்று தான் கலையகத்தில் குரல் பதிவு செய்வதைப் பதிவிட்டுள்ளார்.
"இது மிகவும் அருமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன், நான் இப்போது மெட்டா AI-இன் ஒரு பகுதியாக இருக்கிறேன், எனது குரலில் ஆங்கிலத்தில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முழுவதும் நீங்கள் உரையாடலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மெட்டா AI-க்குக் குரல் கொடுத்த முதல் இந்தியப் பிரபலம் தீபிகா படுகோன் ஆவார்.
சமீபத்தில் உலக மனநல தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் முதலாவது மனநல தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் தற்போது தனது அடுத்த படமான 'கிங்' திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.
இது ஷாருக்கானுடன் அவர் இணையும் ஆறாவது திரைப்படமாகும். இதற்கு முன் அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படத்தில் இருவரும் கடைசியாக இணைந்து நடித்திருந்தனர்.