மன்னார் காற்றாலை கட்டுமான பணிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் காற்றாலை இரண்டாம் கட்ட செயற்திட்டத்துக்கு எதிராக மன்னார் மாவட்டம் மாத்திரம் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், காற்றாலை செயற்திட்டத்தின் கட்டுமான பணிகள் எவையும் இனி இடம்பெறாது என மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு பொலிஸார் வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக காற்றாலை பாகங்களை மன்னார் மாவட்டத்துக்குள் அனுமதிக்க மன்னார் நீதாவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் பொலிஸாரால் இன்றைய தினம் (12) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் போராட்டகாரர்களுக்கு எதிராக தடை உத்தரவு பெரும் நோக்கில் தொடுக்கப்பட்ட வழக்கின் போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
குறிப்பாக இன்றைய தினம் அதிகாலை காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிசென்ற வாகனத்தை போராட்டகாரர்கள் தடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து பொலிஸார் நீதிமன்றத்தில் சில போராட்டகாரர்களுக்கு எதிராக தடையுத்தரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டம் எந்த வகையிலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் இது ஜனநாயக ரீதியாக இடம்பெற்ற போராட்டம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரன் மேற்கொண்ட சமர்பணத்தின் அடிப்படையில் போராட்டகாரர்களுக்கு எதிராகவோ போராட்டத்துக்கு எதிராகவோ அவ்வாறான எந்த கட்டளையும் நீதிமன்றம் பிறப்பிக்காத நிலையில், தற்போது மன்னார் எல்லைக்குள் வருகை தந்துள்ள கனரக வாகனங்களை மாத்திரம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் உரிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறும் குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை 14 நாட்களுக்கு காற்றாலை செயற்திட்டங்களின் எந்த ஒரு கட்டுமான பணிகளும் இடம் பெறுவதை தடுக்கும் வகையிலும் பொலிஸாரின் உத்தரவாதத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.