வீட்டு வாசலில் எச்சில் துப்பியதால் ஏற்பட்ட மோதல் ; 69 வயது முதியவர் உயிரிழப்பு
சென்னை ஓட்டேரியில், வீட்டு வாசலில் எச்சில் துப்பிய விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவர் கீழே தள்ளிவிடப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரி சீனிவாசன் தெருவைச் சேர்ந்த பொன்னுரங்கம் (69), தனது குடும்பத்துடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தார்.
அந்த வீட்டின் கீழ்தளத்தில் சகோதரர்களான சதீஷ் (27), சந்தோஷ் (25) ஆகியோர் வசித்து வந்தனர்.
பொன்னுரங்கத்தின் மருமகள் வீட்டு வாசலைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, சதீஷும் சந்தோஷும் அங்கு எச்சில் துப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் சகோதரர்கள் இருவரும், பொன்னுரங்கத்தின் மகன் கந்தனுடன் இதுதொடர்பாக மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைப் பொன்னுரங்கம் தட்டிக்கேட்டபோது, சகோதரர்கள் இருவரும் அவரைப் பிடித்துக் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இதில், இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த பொன்னுரங்கம் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொன்னுரங்கம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தலைமைச் செயலகக் குடியிருப்பு பொலிஸார், கொலையாகாத மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, சகோதரர்களான சதீஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.