11 வயது மாணவன் மீது தாக்குதல் ; அதிபருக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு
களுத்துறை பண்டாரகம, வெல்மில்ல ஸ்ரீ சாராலங்கார பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயது மாணவன் மீது, பாடசாலையின் அதிபர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்டாரகம காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவன் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறி, அதிபர் அவரது முகத்தின் இருபுறமும் கைகளால் பலமாகத் தாக்கியுள்ளதாக மாணவனின் தந்தை காவல்துறையில் அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலினால் குறித்த மாணவனுக்குப் பல் துலக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர் முதலில் வேதர பிரதேச மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் கொடூரத் தாக்குதலைப் பாடசாலையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிபர் அவர் மீது ஆத்திரமடைந்துள்ளார். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஏனைய ஆசிரியர்கள் மூலம் மனு ஒன்றில் கையொப்பம் பெற்று, குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரைப் பாடசாலையிலிருந்து நீக்குவதற்கு அதிபர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு ஹொரணை வலயக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் மீதான தாக்குதல் மற்றும் தனது வேலைக்கு ஏற்பட்டுள்ள சட்டவிரோத நெருக்கடிகள் குறித்துச் சம்மந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பண்டாரகம காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.