இலங்கையின் முதல் பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி அறிமுகம்
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பறப்பு இந்த மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறவுள்ளதாகவும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன் முதலாவது சோதனைப் பறப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் (Colombo Port City) நடைபெறவுள்ளது. இரு பயணிகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஆளில்லா வானூர்தி, தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான 'EHang' அறிமுகப்படுத்திய 'Global Fast Track Programme' திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக இலங்கை திகழ்கிறது.

இதன் மூலம் ஓட்டுநரற்ற மின்சார செங்குத்து ஏறுதல் மற்றும் இறங்குதல் (eVTOL) வானூர்தி சேவை சர்வதேச அளவில் விரைவுபடுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதன்மை செயல்பாட்டு மண்டலமாக கொழும்பு துறைமுக நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேவையான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டு பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படும்.
சிகிரியா மற்றும் பிதுரங்கலை மீதான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பறப்புகள், மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கும் கொழும்பில் உள்ள நட்சத்திர உணவகங்களுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, சுற்றுலாத் துறை மட்டுமின்றி, கடல்சார் தளவாடங்கள் (Maritime Logistics) உள்ளிட்ட பிற துறைகளிலும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பறப்பு இம்மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறவுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.