கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் நாட்டின் ஆட்சியை தீர்மானிக்காது ; நளிந்த ஜயதிஸ்ஸ
கொழும்பு மாநகர சபையில் மீண்டும் வரவு - செலவு திட்டம் முன்வைக்கப்படும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவு திட்டம் முழு நாட்டினதும் ஆட்சியை தீர்மானிக்கப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவு - செலவு திட்டம்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவு திட்டம் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். கடந்த காலங்களிலும் இதேபோன்று வெவ்வேறு உள்ளுராட்சிமன்றங்களில் வரவு - செலவு திட்டங்கள் தோல்வியடைந்தன. சில நிறைவேற்றப்பட்டன.
நாம் ஆட்சியமைத்த சபைகளில் கூட சில சந்தர்ப்பங்களில் வரவு - செலவு திட்டம் முதல் சந்தர்ப்பத்தில் தோல்வியடைந்தது. அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள சபைகளிலும் சில வரவு - செலவு திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டன. இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் யார் எவ்வாறு வாக்களித்தனர் என்பதை எம்மால் கூற முடியாது.
அனர்த்தங்களின் போது மக்களின் நலனுக்காக மாத்திரமே நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எந்த வகையிலும் அவற்றின் மூலம் நாம் வாக்குகளைப் பெற எதிர்பார்க்கவில்லை.
கிரைண்டரில் அரைத்து வீசப்பட்ட கணவனின் பாகங்கள் ; காட்டிக்கொடுத்த டாட்டூ ; குழந்தைகள் வாக்குமூலம் கொடுத்த ஷாக்
மீண்டும் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது இந்த முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். கொழும்பு வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தானே அதன் மேயர் எனக் கூறியிருக்கின்றார்.
எந்த அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்பது எமக்கு தெரியாது. வரவு - செலவு திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் அதனை சமர்ப்பிக்க முடியும். மீண்டும் தோல்வியடைந்தால் தலைவர் மற்றும் மேயர் தொடர்ந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க முடியும் என்பதே சட்டமாகும்.
மாறாக கொழும்புக்கு மாத்திரம் வேறு சட்டம் இல்லை. இன்னும் இரு வாரங்களில் மீண்டும் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு , அதனை நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளிப்பர் என்று நம்புகின்றோம்.
கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவு திட்டத்தால் மாத்திரம் முழு நாட்டின் ஆட்சியையும் மாற்றி விட முடியாது என்றார்.