கூட்டணி ஆதரவு போதவில்லை ; கொழும்பு மாநகர சபை பாதீடு தோல்வி
தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
பாதீட்டுக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது.

இத்தேர்தலில் 36.92 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலை பெற்றது.
எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் எத்தரப்பும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி ஏனைய சில தரப்புகளின் ஆதரவுடன் சபையின் ஆட்சியைப் பொறுப்பேற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும் பெற்று முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
வட்டார ரீதியாக 66 உறுப்பினர்களும், விகிதாசார முறையில் 51 உறுப்பினர்களும் என மொத்தம் 117 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபை, 2025 ஜூன் மாதம் தனது முதலாவது அமர்வை ஆரம்பித்தது.