கொழும்பு தெமட்டகொடை துப்பாக்கிச் சூடு ; வெளியான புதிய தகவல்
கொழும்பு தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 'வனாத்தே சது' என்ற குற்றவாளியின் தரப்பினரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று (23) மாலை 6.35 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது.
பொரளை, வனத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என்பவரே துப்பாக்கிதாரியின் இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் கடந்த வருடம் ஜூலை மாதம் பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, துப்பாக்கியை வழங்கிய நபராவார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அச்சம்பவத்திற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ள 'வனாத்தே துமிந்த' என்ற குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி எனத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் அவரது மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தும் விதம் சி.சி.டி.வி (CCTV) கெமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
இதன்போது, அவர்களின் இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஓடும்போதும் அவரைத் துரத்தித் துரத்திச் சுடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
அதன்பின்னர் துப்பாக்கிதாரிகள் அவ்விடத்திலிருந்து தப்பியோடும் காட்சியும் அதில் காணப்படுகிறது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.