பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
சந்தேகநபர் இன்று (24) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இணையவழி ஊடாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மட்டக்களப்பு நீதவான் ஏ. தர்ஷினி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இடம்பெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.
வழக்கின் தற்போதைய நிலை, விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி முருகன் கோவில் அருகில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை உள்ளடக்கிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அதே ஆண்டு மே 22ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுனியா பகுதியில் ஆயுதமேந்திய குழுவொன்று ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.