CID காவலில் வேண்டாம்; ஜனாதிபதி அனுரவிடம் கெஞ்சும் சுரேஷ் சல்லே மனைவி !
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்பு காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவியான மனோரி சலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்குமாறு கோரி கடிதம்
முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சல்லேவின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், ஜூன் 7ஆம் திகதி அவர் இலங்கை தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஜூன் 27ஆம் திகதியன்று இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். தொடர்ந்த இருதயப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு ஐஊனு எனப்படும் இதயக் கருவி பொருத்தப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் சல்லேவுக்கு தொடர்ச்சியான சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும், தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சல்லேயின் மனைவி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.
அத்துடன், சல்லே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.