3 சீனர்களை பிடிக்க பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்
கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம்
சம்பவத்தின்போது மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் மூன்று சீன சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேடப்பட்டு வரும் மூவரும் தற்போது இலங்கையிலேயே இருப்பதாகவும், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்குப் பயன்படுத்திய சுற்றுலா விசா காலாவதியாகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வான் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், அவர்களின் நடமாட்டம் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்களை கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071 859 1735 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.