நூறு ஆண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்ட எச்சரிக்கை; இந்திய பெருங்கடலை ஆக்கிரமிக்கும் சீன கப்பல்கள்!
இந்திய பெருங்கடல் பகுதியை கட்டுபடுத்துபவர்கள் ஆசியாவை ஆள முடியும் என்றும், இந்திய பெருங்கடல் பகுதியில் உலகின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கடல்சார் நிபுணர் ஆல்ஃப்ரட் மஹான் கூறினார்.
இந்நிலையில் தற்போது அவர் கூறிய கூற்று உண்மையாகிறது, அதாவது இந்திய பெருங்கடலை கட்டுபடுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அதில் சீனா முன்னனியில் உள்ளது.
இந்தியாவின் கொல்லை புறமான இந்திய பெருங்கடல் பகுதி வழியாக தான் சீனாவின் 80% கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிறது மற்றும் மேற்கு ஆசியா ஆஃப்ரிக்கா மற்றும் ஐரோப்பா உடனான 95% வர்த்தகம் இந்த பாதை வழியாக தான் நடைபெறுகிறது.
உலகின் 20% நீர்பரப்பை கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடலான இந்திய பெருங்கடலை சீனா ராணுவ மயமாக்கும் முயற்சிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கப்பல்களை அனுப்பி வருகிறது.
கடற்கொள்ளை ஒழிப்பை சாக்காக வைத்து கொண்டு அதிகமாக நடமாட தொடங்கிய சீன கப்பல்கள் கடற்கொள்ளை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்ட பின்னர் கூட இந்திய பெருங்கடல் பகுதியில் உலா வருகின்றன.
தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது படைகளை இயக்க ராணுவ தளங்கள் தொலை தொடர்பு வசதிகள் வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்களை சீன கடற்படை அதிகரித்து கொண்டே வருகிறது.
அந்தவகையில் மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, செஷல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது சப்ளை தளங்களை அமைக்க சீனா விரும்புகிறது.
இந்த நாடுகள் தவிர ஐக்கிய அரபு அமீரகத்தின் கிலிஃபா துறைமுகம், பாகிஸ்தானுடைய க்வதர் துறைமுகம், இலங்கையின் ஹம்பன்தோட்டா, மியான்மரின் கியாக்ஃபியூ ஆகிய துறைமுகங்களை சீனா பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது.
குறிப்பாக தனது விமானந்தாங்கி, நாசகாரி, ஃப்ரிகேட், கார்வெட், நிலநீர் போர்முறை கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிகள் ஆகியவற்றை நிறுத்தும் வகையிலான தளங்களை அமைக்க சீனா விரும்புகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.