சேலத்தில் விமான சேவையில் மாற்றம் ; பயணிகள் அதிருப்தி
சேலம் விமான நிலையத்தில் உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த மூன்று விமான சேவைகள் இந்த மாத இறுதியில் நிறுத்தப்படவுள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது.
இங்கிருந்து இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் சென்னை – சேலம் – சென்னை இடையே பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்குப் புறப்படும் விமானம், மாலை 3.10 மணிக்கு சேலத்தைச் சென்றடைகிறது.

பின்னர், மாலை 3.40 மணிக்குச் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது.
இதற்கிடையில், உதான் திட்டத்தின் கீழ் பெங்களூரு – சேலம் – கொச்சி, பெங்களூரு – சேலம் – பெங்களூரு மற்றும் ஐதராபாத் – சேலம் – ஐதராபாத் ஆகிய வழித்தடங்களிலும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.
பெங்களூரு – சேலம் – கொச்சி வழித்தடத்தில் விமான சேவையை வழங்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் ஒப்பந்தக் காலம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதேபோல், பெங்களூரு – சேலம் – பெங்களூரு மற்றும் ஐதராபாத் – சேலம் – ஐதராபாத் வழித்தடங்களில் சேவைகளை வழங்கி வந்த இண்டிகோ நிறுவனத்தின் ஒப்பந்தக் காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, குறிப்பிட்ட மூன்று விமான சேவைகளும் ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்து இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இந்த வழித்தடங்களைப் பயன்படுத்தி வந்த பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், வரும் 25ஆம் தேதி முதல் சென்னை – சேலம் – சென்னை வழித்தடத்தில் இண்டிகோ நிறுவனம் சார்பில் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படவுள்ளது.
சென்னைக்கான கூடுதல் விமான சேவை பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த மூன்று விமான சேவைகள் நிறுத்தப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.