ஏற்றுமதியாளர்களுக்கு புதிய விதிமுறை ; இலங்கை மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு
இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் தங்களுக்குக் கிடைக்கும் ஏற்றுமதி வருமானத்தில் எஞ்சியிருக்கும் தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பாக அல்லது அதே தினத்திற்குள் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த ஏற்றுமதி வருமானத்தை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட கொடுப்பனவுகள் மற்றும் செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவ்வாறான அனுமதிக்கப்பட்ட செலவுகள் மற்றும் கொடுப்பனவுகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகை, குறிப்பிட்ட காலவரையறைக்குள் உள்நாட்டு நாணயமான இலங்கை ரூபாவாக மாற்றப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு நாணய வருவாயின் ஒழுங்குமுறை முகாமைத்துவத்தையும், நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.