18 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு ஏற்பட்ட நெருக்கடி; சுமந்திரனுக்கு ஏமாற்றம்
எதிர்வரும் திங்கள் கிழமை (18) இலங்கை தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (18) ஹர்த்தால் மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தால்
குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் இரு தினங்களுக்கு முன்பு நேரடியாக சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்கு வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை இன்று (15) கூடியது. இதன்போது அநேகமான நிர்வாக சபை உறுப்பினர்கள் அன்றைய தினம் வியாபார நிலையங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை (18) வியாபார செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறும் என்றும், வவுனியா வர்த்தகர் சங்கம் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது என அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.