போதையில் பிரதேச சபை உறுப்பினர் தாக்குதல்; பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்
மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலில் காயமடைந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று (15) பிற்பகல் பாதுக்க மாவத்தகம பகுதியில் முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும், மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனை அடுத்து, பாதுக்க பொலிஸார் காரின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், விபத்துக்குள்ளான காரையும் கைப்பற்றினர்.
காரின் சாரதி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதுக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சீதாவாக்கை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அங்கிருந்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாரை தாக்கிய நிலையில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரை சிறைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
இதையடுத்து உடல் நலக் குறைவினால் தமக்கு சிறையில் தங்கியிருக்க முடியாது என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அறியப்படுத்தியதை தொடர்ந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.