ஆடி அமாவாசை பித்ரு கடமைகளை நிறைவேற்ற சென்றவர்களிடம் பெளத்த பிக்கு அடாவடி
கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில், ஆடி அமாவாசை பித்ரு கடமைகளை இன்று (24) செய்தவர்கள் தானமாக வழங்கிய 100 கிலோ கிராமுக்கும் அதிகமான மரக்கறிப் பொருட்கள் மற்றும் பூஜை செய்வதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பவற்றை ஏற்றிச் செல்ல வந்த முச்சக்கர வண்டியை பொருட்களை ஏற்ற விடாது தடுத்து அந்த இடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை வெளியேற்றி பெளத்த பிக்கு ஒருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
சிவன் கோவிலில் ஆடி அமாவாசை பிதுர்கடன் நிறைவேற்றுவதற்கான பூஜைகள் காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை நடத்துவதற்குரிய அனுமதி உத்தியோகபூர்வமாக ஏற்பாட்டுக் குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
பித்ரு கடன்
இந்நிலையில் 10.55 மணியளவில் பூசைகளில் ஈடுபட்டிருந்த பூசகர்கள் தமக்கு தானம் வழங்கப்பட்ட பொருட்களை ஏற்றுவதற்கு முச்சக்கர வண்டி ஒன்றை அழைத்த போது பெளத்த பிக்கு அங்கு வந்து வாகனத்தை வெளியில் கொண்டு போகுமாறு வாகன சாரதியை ஏசியுள்ளார்.
இதனை அடுத்து மிகுந்த சிரமத்துடன் பொருட்கள் அனைத்தும் அங்கிருந்த பூசகர்கள் மற்றும் பக்தர்கள் ஒரு சிலரால் தூக்கி செல்லப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் காரணமாக பித்ரு கடன் செலுத்த வந்தவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.