லண்டனில் கறுப்பு யூலை நினைவேந்தல் ; நீதிக்காக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (23) லண்டனில் நடைபெற்றது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இடம்பெற்ற இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து, நீதிக்கான கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஈழத்தமிழர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான நீதி நடைமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.