ஆரோக்கியத்தை காக்கும் கொள்ளு பருப்பு ; தினமும் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
பழங்காலத்தில் நம் முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு வந்த உணவுகளுள் கொள்ளு பருப்பும் ஒன்று. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சில முக்கிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், கொள்ளு பருப்பை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

பொதுவாக கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை அனைவரும் அறிவோம். இது தவிர இந்த கொள்ளு பருப்பை உட்கொள்வதனால் வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும் அவை என்னவென்று நாம் இங்கு பார்ப்போம்.

எடை இழப்பு
கொள்ளு பருப்பில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவி புரிந்து, உடல் எடை குறைய உதவுகிறது. மேலும் இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதால், கண்ட உணவுகளின் மீதான நாட்டமும் குறையும். . அதோடு, இது செரிமானத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அதற்கு கொள்ளுவை சூப்பாகவோ, ரசமாகவோ அல்லது துவையலாகவோ செய்து எடுத்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொள்ளு பருப்பில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இரும்புச்சத்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளின் அபாயத்தை எதிர்த்து போராட உதவுகிற்ன. எனவே சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொள்ளு ரசம் அல்லது கொள்ளு சூப் குடியுங்கள்.

இரத்த சர்க்கரை கட்டுப்படும்
கொள்ளு பருப்பு குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸை கொண்டது. அதாவது, இது இரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடுவதை மெதுவாக்குவதால், இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிப்பது கட்டுப்படும். எனவே கொள்ளு பருப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த உணவுப் பொருள்.

செரிமானம் மேம்படும்
கொள்ளு பருப்பு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கல், அசிடிட்டி மற்றும் வயிறு உப்புசம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இது குடலியக்கத்தின் செயல்பாட்டை சீராகி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்
மேம்படும் கொள்ளு பருப்பில் பாலிஃபீனால்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக இதய ஆரோக்கியம் மேம்படும்.
