இராணுவ முகாமிற்குள் தாக்கப்பட்ட இளைஞர்கள்; நீதியான விசாரணை நடத்தப்படும்
முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் தொடர்பில் இன்று (9) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்கள் மீது தாக்குதல்
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் 7 இளைஞர்கள் சென்றதாகவும், அவர்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளதுடன் தப்பியோடிய ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டேன்.
இது தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருந்தேன்.
பொலிஸார் இது தொடர்பில் நீதியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு, எமது உயர்மட்ட அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன்.
அவர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத் தன்மையினை வெளிபபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.