யாழில் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
யாழில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (23.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது அவ் வீதியில் வந்த இரண்டு இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் இரண்டு இளைஞர்களும் பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
பொலிஸாரிடம் தப்பித்து செல்வதற்காக அதி வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் சந்தியில் பயணித்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தப்பித்தோடிய நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.