வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறு
வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இருவர் இன்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பெய்து வந்த மழை காரணமாக வெள்ளநீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டத்தை சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.

வீடு ஒன்றை பரிசோதனை
இதன் ஒரு கட்டமாக வவுனியா, பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை பரிசோதனை செய்யும்போது குறித்த வீட்டில் டெங்கு நுளம்பு இனங்காணப்பட்டுள்ளன.
இதனை அடுத்து நுளம்புகளை கட்டுப்படுத்தி அப்பகுதியை சுத்தம் செய்து தமக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார பரிசோதர்களால் அறிவுறுத்தப்பட்டபோது சுகாதார பரிசோதர்களுடன் வீட்டு உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், சுகாதார பரிசோதர்களின் கடமைக்கும் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து சுகாதார பரிசோதகர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் வீட்டு உரிமையாளரை பொலிஸ் நிலையம் வருமாறு தெரிவித்தனர்.
இருப்பினும் பொலிஸாருடனும் குறித்த வீட்டு உரிமையாளர்கள் முரண்பட்ட நிலையில் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.