கொழும்பு ரயில் கடவையில் கோர விபத்து ; முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கொழும்பு அளுத்கம, டிப்போ வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
மருதானையிலிருந்து ஹக்கடுவை நோக்கிப் பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வேளையில், முச்சக்கரவண்டி தர்கா நகரிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், ரயில் கடவையை கவனக்குறைவாகக் கடக்க முற்பட்டபோதே ரயிலுடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த சமயத்தில் முச்சக்கரவண்டியில் சாரதி மட்டுமே பயணித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவரது விவரங்களை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.