யாழ் வைத்தியசாலை தீ விபத்து மர்மம் ; விசாரணை தொடர்பில் விளக்கம்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த தீ விபத்து தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (10) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி, யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் அபாயகரமான சம்பவம் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, மருந்துகள் தொடர்பான தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை கவலைக்கிடமானதுடன், சந்தேகத்திற்குரியதாகவும் கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு செய்திருந்ததாகவும், அதன் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.