தமிழர் பகுதியில் நொடிப்பொழுதில் எரிந்து நாசமான புடவைக்கடை
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் இன்று (20) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த கடையின் உரிமையாளர் மதிய உணவிற்காக கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்றாகீம் என்பவருக்குச் சொந்தமான இந்த புடவைக் கடை தீயில் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, காத்தான்குடி நகர சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தன.
மேலும், காத்தான்குடி பொலிஸார், நகர சபை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம் தீ அருகிலிருந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு, தீயணைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், மின் கசிவு அல்லது மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தீ விபத்தில் புடவைக் கடை முழுமையாக எரிந்து நாசமானமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.