எரிபொருள் விலை குறைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
உலகளாவிய எரிபொருள் விலைகள் தற்போதைய குறைந்த மட்டத்தில் தொடருமானால், அதன் நன்மைகளை ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விற்பனையின் மூலம் இலாபம் ஈட்டுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய எரிபொருள் விலை நிலவரம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாவும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 ரூபாவும் மானியமாக அரசாங்கம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், எரிபொருள் கொள்முதல் என்பது சாதாரண சந்தையில் பொருட்களை வாங்குவதைப் போன்ற உடனடி நடவடிக்கையல்ல என சுட்டிக்காட்டிய அவர், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட டெண்டர் நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த விலைகளின் அடிப்படையிலேயே எரிபொருள் இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
எனவே, உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களின் பயன் உடனடியாக உள்நாட்டு சந்தையில் பிரதிபலிக்காது என்றும், தேவையான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னரே பொதுமக்களுக்கு அதன் நன்மைகளை வழங்க முடியும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.