கோபாலா நீ வாடா...யாழில் மனதை உருக்கும் ஒரு தாயின் பிரார்த்தனை!
யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்
அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை இவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்(ஓஎம்பி) ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது.
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.