2024 இல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடி செலவு
2024 இல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடி செலவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல்" சட்ட விதிகளின்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் அறிவித்தார்.
இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்
இதேவேளை ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல்" சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஏற்கனவே அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (10) பாராளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார்.
ஹம்பாந்தோட்டை செல்லும் மஹிந்த
இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்திருந்தது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர உள்ளதாக மொட்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்க எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.